மலேசியத் தமிழ் அறவாரியத்தின் தலைவர் திரு.இராகவன் அண்ணாமலை அறவாரியத்தின் அடுத்தக் கட்ட நகர்வுக்காக வட மாநிலங்களுக்குப் பயணத்தை மேற்கொண்டார். சுமார் 6 நாட்களுக்கு நீடித்த இந்தப் பயணம் பெர்லிஸ் தொடங்கி பேராக் மாநிலம் வரை நீடித்தது. தலைவர் இப்பயணத்தின்போது அம்மாநிலங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகள், தமிழ் இயக்கங்கள், இயக்கத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், இம்பாக் திட்டக் குழுவினர், பள்ளி வாரியக் குழுவினர் என பலரை நேரில் சந்தித்தார். 14 ஆண்டுகளைக் கடந்து தமிழ் அறவாரியம் பீடுநடை போடுவதற்கு மேற்கண்ட தரப்பினர்களின் பங்கு அளப்பரியது. ஆக, இத்தகையவர்களிடம் அறவாரியத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான வழிவகைகளைக் கலந்தாலோசிக்கும் நோக்கிலேயே தலைவரின் பயணம் அமைந்தது.

பெர்லிஸ் மாநிலப் பயணம்

தலைவர் பெர்லிஸ் மாநிலத்தில் கங்கார் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி பரிமளா சுகுமாறனையும், அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு ஸ்ரீ-யையும் நேரில் சென்று சந்தித்தார். இச்சந்திப்பில் அறவாரியத்தின் நோக்கமும் செயல்திட்டங்களும் பள்ளி தரப்புக்கு விளக்கப்பட்டது. மேலும் பள்ளியில் வாரியக் குழு அமைக்கவும் இம்பாக் திட்டத்தை வழிநடத்தவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. பள்ளி சந்திப்பின் தொடர்ச்சியாக பெர்லிஸ் மாநில இந்தியர் சங்கத்தின் பொறுப்பாளர்களைத் தலைவர் சந்தித்தார். இச்சந்திப்பில்  இரு இயக்கங்களின் நோக்கமும் செயல்திட்டங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. மேலும் அறவாரியத்தின் முயற்சிகளுக்குப் பெர்லிஸ் மாநில இந்தியர் சங்கம் துணை நிற்பதாகவும் கூறினர். வரக்கூடிய காலங்களில் பெர்லிஸ் மாநிலத்தில் இரு இயக்கங்களும் இணைந்து சேவையாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் தலைவர் கலந்தாலோசித்தார்.

கெடா மாநிலப் பயணம்

பெர்லிஸ் மாநிலத்தைத் தொடர்ந்து தலைவர் கெடா மாநிலத்திற்குப் பயணத்தை மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் அவர் புதிதாக அமையவிருக்கும் தாமான் கெலாடி தமிழ்ப்பள்ளி கட்டுமான பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து தலைவர் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி, ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி, மகாஜோதி தமிழ்ப்பள்ளி, கலைமகள் தமிழ்ப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு வருகை மேற்கொண்டார். இப்பயணங்களுக்குத் திரு.துரை ஏற்பாடு செய்திருந்தார். இவர் தாமான் கெலாடி தமிழ்ப்பள்ளி உருவாவதற்கு காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளின் பயணத்தைத் தொடர்ந்து அறவாரியத் தலைவர் அறவாரிய உறுப்பினர்கள், இம்பாக் திட்டக் குழுவினர், பள்ளி வாரியக் குழுவினர், இயக்கங்கள் ஆகிய குழுவினரைக் கெடா மாநிலத் தமிழ் அறவாரிய பணிமனையில் சந்தித்துப் பேசினார். மலேசியத் தமிழ் அறவாரியத்தின் அழைப்பை ஏற்று வருகை புரிந்த அனைவருக்கும் தலைவர் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

இச்சந்திப்பில் தமிழ்ப்பள்ளிகளைக் கடந்து இடைநிலைப்பள்ளிகளிலும் தமிழ்க்கல்வியை மேம்படுத்த வழிவகைகள் செய்யப்பட வேண்டும் என கலந்தாலோசிக்கப்பட்டது. தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் இடைநிலைப்பள்ளியில் தமிழ்ப் பாடத்தை எடுக்காமல் இருப்பதைக் களையும் வண்ணம் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் பேசப்பட்டது.

இதுநாள் வரை தமிழ்ப்பள்ளிகளை மட்டுமே முகான்மை நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட தமிழ் அறவாரியம் இப்பொழுது இடைநிலைப்பள்ளியில் தமிழ்க்கல்வி குறித்தும் சிந்தித்து வருவதாகத் தமிழ் அறவாரியத்தின் தலைவர் தெரிவித்தார். மேலும் அண்மையில் எஸ்.டி.பி.எம். தேர்வில் தமிழ் மொழி பாடத்தை எடுப்பதற்கான பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

பினாங்கு மாநிலப் பயணம்

பினாங்கு மாநிலப் பயணத்தில் திரு முனுசாமி நமக்குத் துணையாகச் செயல்பட்டார். பயணத்தின் முதல் அங்கமாக பள்ளி வாரிய உறுப்பினர்கள், இம்பாக் குழுவினர், இயக்க பொறுப்பாளர்களைத் தலைவர் பட்டர்வெர்த்தில் அமைந்துள்ள சுபாய்டா உணவகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பிலும் இடைநிலைப்பள்ளியில் தமிழ்க்கல்வி தொடர்பிலேயே பெருமளவு பேசப்பட்டது. இடைநிலைப்பள்ளிகள் நமது மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து பயில்வதற்குப் பணிகளை இணைந்து முன்னெடுக்கக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சுமார் 14 பேர் கலந்து கொண்டனர். மேலும் எஸ்.டி.பி.எம். தமிழ்மொழி பாடம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆறாம் படிவத்தில் மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுக்க வழிவகைகள் மேற்கொள்ள இணைந்து திட்டங்களை முன்னெடுக்க முடிவெடுக்கப்பட்டது.

இதனிடையே பயணத்தின் அடுத்தக் கட்டமாகப் பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோ அன்பழகனைத் தலைவர் நேரில் கண்டார். அறவாரியத்தின் நோக்கம், இலக்குக் குறித்தும் அவருக்கு விளக்கப்பட்டது. மேலும் பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நில விவகாரம் குறித்தும் டத்தோ அன்பழகனிடம் விளக்கம் கோரப்பட்டது.

பினாங்கு மாநிலப் பயணத்தின் அடுத்தக்கட்டமாக தலைவர் பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் திரு சிங்காரவேலுவையும் மொழிப் பிரிவு உதவி இயக்குநர் திருமதி சகுந்தலாவையும் சந்தித்துப் பேசினார். இக்கூட்டத்தில் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி பட்டறை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு அமைப்பாளர், துணை இயக்குநரின் உதவி பெரிதும் எதிர்பார்ப்பதாகக் கூறினார். அவர்களுக்கு அதற்கு ஒப்புதல் தெரிவித்து முடிந்த உதவிகளைச் செய்வதாகக் கூறினர்.

பிறகு தலைவரின் பயணம் நிபோங் தெபாலில் அமைந்துள்ள தென் செபராங் பிறை இந்தியர் சங்கத்திற்குத் தொடர்ந்தது. அங்கு சங்கப் பொறுப்பாளர்களோடு நடத்தப்பட்ட சந்திப்பில் அவ்வட்டாரத்தில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தமிழ் விழா ஒன்றனை முன்னெடுக்க முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பினாங்கில் அமைந்துள்ள 4 இயக்கங்களும் தமிழ் அறவாரியமும் இணைந்து இவ்விழாவை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

பினாங்கு மாநிலச் சந்திப்பில் நிபோங் தெபால் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியரையும் தமிழ்க் கோட்டத்தின் தலைவர் திரு கவின்மலரையும் தமிழ் அறவாரியத் தலைவர் நேரில் சென்று சந்தித்தார். இச்சந்திப்பின் வழி பள்ளிகளுக்கும் அறவாரியத்திற்கான உறவும் இயக்கங்களுக்கும் அறவாரியத்திற்கான உறவும் வலுப்படும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

பேராக் மாநிலப் பயணம்

பேராக் மாநிலத்தில் இரு இடங்களில் தலைவரின் சந்திப்பு நடைபெற்றது. முதல் சந்திப்புச் சுங்கை சிப்புட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி கலாசாலையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி வாரியக் குழுவினர், இயக்கங்கள் என 30 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இச்சந்திப்புக் கூட்டத்திற்கு திரு சொ.தியாகராஜன் ஏற்பாடு செய்திருந்தார். இக்கூட்டத்தில் மிகவும் முக்கியமாகப் பன்மை வகுப்புக் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலர் இந்த பன்மை வகுப்பு குறித்துத் தத்தம் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். ஆயினும் தமிழ் அறவாரியத் தலைவர் பன்மை வகுப்பின் நன்மை தீமைகள் குறித்து அறவாரியம் துறைசார் நிபுணர்களோடு இணைந்து ஆய்வு ஒன்றனை நடத்தி வருவதாகவும் ஆய்வின் முடிவை விரைவில் வெளியிடவிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒரு திட்டத்தின் வெற்றி மாணவர்களை வைத்தே அமைகிறது. ஆகவே மாணவர்களையே இறுதி குறிக்கோளாகக் கொண்டு நாம் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அந்த வகையில் பன்மை வகுப்பின்  விளைவுகளும் ஆராயப்பட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தப்படும் என அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

பேராக் மாநிலத்தில் அடுத்த பயணமாக ஈப்போவில் டி ஸ்டார் உணவு விடுதியில் தமிழ் அறவாரியத்தின் தலைவர் திரு. இராகவன் அண்ணாமலை, பேராக் மாநில இம்பாக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு ரவீந்திரன் தலைமையிலான குழுவைச் சந்தித்தார்.

தமிழ் அறவாரியத்தின் இம்பாக் திட்டம் பேராக் மாநிலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக திரு ரவீந்திரன் சொன்னார். அத்திட்டத்தின் அடுத்தக்கட்டமாக இம்பாக் பெற்றோர்களின் பிள்ளைகளுக்குச் சிறப்பு முகாம் 200 மாணவர்களுக்குப் பயிற்சியளித்தோம். அப்பயிற்சி முகாமின் பரிசளிப்பு விழாவில் தமிழ் அறவாரியத் தலைவர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அறவாரியத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்குப் பேருதவியாக இருக்கும் பேராக் மாநிலக் குழுவினருக்கு தமது நன்றியினையும் வாழ்த்துகளையும் தமிழ் அறவாரியத் தலைவர் திரு இராகவன் அண்ணாமலை தெரிவித்தார்.

இச்சந்திப்புக் கூட்டத்தில் மலேசிய இந்தியர்கள் மேம்பாட்டுத் திட்டவரைவு குறித்து விவாதிக்கப்பட்டது.