உன்னுயிரை உறையவைத்து

உலகதனில் உலவவைத்து

கண்ணெதிரில் வளரவிட்டு

கருத்ததனை நிறையவிட்டு

என்னுரிமை நிலைசாய்த்து

எட்டுத்திக்கும் வலைசேர்த்து

செல்லுமிடம் பலர்கேட்டு

செவிமுழுதும் தடம்போட்டு

ஏகனாய் நின்றவனே !

 

உன்னுயிராய் நான்வாழ

உத்தமம்தான் செய்திருப்பேன்

உன்னவளின் உதிரத்தில்

உருமுழுமை நான்பெற்றேன்

சிதையாமல் உம்போல

 

சிலையறிவு நிலைபெற்றேன்

சிந்தாமல் நீயளித்த

சீர்குணத்தை வரப்பெற்றேன்

ஆதியாய் ஆண்டவனை !

 

இந்நாளும் எந்நாளும்

இளைத்தாலும் இடித்தாலும்

இறவாத உன்னன்பை

இரவாமல் இருப்பேனே

உந்நாளாம் இந்நாளில்

உரைத்திடுவேன் உம்புகழை

உற்றாரும் மற்றாரும்

உன்னதமாய் உயர்பேச

அந்தத்தின் நாயகனே !

 

 

உன்போல இன்னொருவர்

ஒருகாலும் வாராரே

உன்னன்புப் பெற்றமைக்கு

உலகவனைக் கூப்புகிறேன்

தந்தையர் தின வாழ்த்துடனே!

 

மகேந்திரன் கோவிந்தராஜ்

தெலுக் கூரின் “A”

30100 பெந்தோங்.