எஸ்டிபிஎம் தேர்வில் தமிழ்மொழியைத் தேர்வுப் பாடமாக எடுப்பதற்கு இந்திய மாணவர்களுக்கு எந்தத் தடையுமில்லை என மலாயாப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் எஸ்.குமரன் தெரிவித்தார். எஸ்டிபிம் தேர்வில் நான்கு பாடங்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் சில பள்ளிகளின் முதல்வர்கள் தமிழ்மொழியை ஐந்தாவது பாடமாக மாணவர்கள் படிப்பதற்கு அனுமதி வழங்குவதில்லை என்ற சர்ச்சை அண்மையில் எழுந்தது.

இதுகுறித்து கல்வியமைச்சின் துணையமைச்சர் டத்தோ பி.கமலநாதன் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு காணப்பட்டுள்ளதாகவும் தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

எஸ்டிபிஎம்மில் தமிழ்மொழியைத் தேர்வுப் பாடமாக எடுப்பதற்கு இந்திய மாணவர்கள் விரும்பவதில்லை என்ற கருத்துப் பரவலாக நிலவி வருகிறது. இதனால் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நாடு தழுவிய நிலையில் எஸ்பிஎம் தேர்வு எழுதிய மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் கருத்துக் கேட்டபோது 2,884 பேர் எஸ்டிபிஎம் தேர்வில் தமிழ்மொழியைத் தேர்ந்தெடுக்க இணக்கம் தெரிவித்திருந்தனர். இந்த எண்ணிக்கை மாணவர்கள் தேர்வில் தமிழ்மொழியைப் பாடமாக எடுக்க விரும்புவது உறுதியாகிறது.

இதனிடையே, இவ்வாண்டு எஸ்டிபிஎம்மில் தமிழ்மொழியைத் தேர்வுப் பாடமாக 725 மாணவர்கள் எடுக்க முன்வந்துள்ளனர். அவர்களுக்கு எந்தத் தடையும் விதிக்கக்கூடாது என்று பள்ளி முதல்வர்களுக்குக் கல்வியமைச்சு கடிதம் அனுப்பவிருக்கின்றது. இப்பொழுது ஒரு பள்ளியில் தமிழ்மொழியைத் தேர்வுப் பாடமாக எடுப்பதற்கு குறைந்தது 15 மாணவர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் மட்டுமே தமிழ்மொழியைப் போதிக்க ஆசிரியரை அமர்த்த முடியும்.

ஆகவே சமுதாய பிரதிநிதிகள், சங்கத் தலைவர்கள் அனைவரும் இணைந்து தத்தம் தங்களது பகுதிகளிலுள்ள மாணவர்களை அணுகி 15 பேரை அடையாளம் காண வேண்டியது அவசியம் என முனைவர் குமரன் வலியுறுத்தினார்.

கடந்த 13.5.2017 அன்று தமிழ் அறவாரியப் பணிமனையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் ராப்பார்ட் மலேசியா தலைவர் திரு ராஜரத்தினம், மலேசியத் தமிழ்க்காப்பகம், மலேசியத் தமிழர் சங்கத்தைச் சார்ந்த திரு பொன்ரங்கன், மலேசிய இந்திய முன்னேற்ற மன்றத்தைச் சேர்ந்த திரு பாரதிதாசன், மலேசியத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் திரு மனோகரன், பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றத்தைச் சேர்ந்த சிவநேசன் உட்பட பல இயக்கங்களைச் சேர்ந்த நிகராளிகளும் கலந்து கொண்டனர்.