வாசிப்புப் பழக்கம் மனிதனின் அறிவை மட்டுமல்ல ஆன்மாவையும் உடன் அணைத்து மெருகேற்றும் பழக்கமாகும். படிக்கப் படிக்கத்தான் அறிவு ஊறும் என்கிறது வள்ளுவம். ஆனால் இந்த அவசர உலகில் முகம் பார்த்து பேசவே நேரம் இல்லாதபோது படிக்கவா நேரம் இருக்கப் போகிறது என பலர் கேட்கின்றனர். இருந்தாலும் வாசிப்பின் அவசியத்தை உணர்ந்து ஜோகூர் மாநில இம்பாக் குழுவினர் கலிடி தமிழ்ப்பள்ளியில் கருடப் பேழை எனும் சிறு நூல்நிலையத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.

இத்திட்டம் மாணவர்களிடையே மட்டுமின்றி பெற்றோர்களிடத்திலும் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த புனிதன் முத்துசாமியால் தொடங்கப்பட்டது. கருடனை வழிபட்டால் நம்முள், இருக்கும் விசத் தன்மைகள் அழிக்கப்படுமென்பது ஐதீகம். அதேபோல் இக்கருடப் பேழையில் உள்ள புத்தகங்களை வாசிப்பதால் நம்முள் இருக்கும் விசத்தன்மைகளை ஆணவம், பேராசை, கோபம், வெறுப்பு போன்ற துர்குணங்களை அழிக்கலாமென்பது தமிழ் அறவாரியத்தின் ஜோகூர் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி முனியம்மா கருணாகரனின் நம்பிக்கை.

அச்சிறு நூல்நிலையம் பள்ளியின் நுழைவாயிலிலேயே அமைக்கப்பட்டுள்ளது. அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்குக் காத்திருக்கும்பொழுது இக்கருடப் பேழையின் உள்ள புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம். தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை அவர்கள் எடுத்தும் கொள்ளலாம். ஆனால் அப்புத்தகத்திற்கு மாற்றாக மற்றொரு புத்தகத்தைக் கருடப் பேழையில் வைக்க வேண்டும்.

கருடப் பேழை ஒவ்வொரு பள்ளிகளிலும் இருக்க வேண்டிய பெட்டகமாகும். பள்ளி என்பது மாணவர்களின் அறிவை வளர்க்கும் இடம் மட்டுமன்று. பள்ளியைச் சார்ந்த பெற்றோர்கள், ஆதரவாளர்கள் என அனைவருக்கும் அறிவூட்டும் ஆலயமாகத் திகழ வேண்டுமென தாம் பெரிதும் எதிர்ப்பார்ப்பதாக ஜோகூர் மாநில இம்பாக் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி முனியம்மா கருணாகரன் கருத்துரைத்தார்.