பரபரப்பான சூழலில் நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை. வளத்தைத் தேடும் பரபரப்பில் ஒவ்வொருவரும்  மும்முரம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். பக்கத்து வீட்டுக்காரரைக்கூட பார்த்துப் பேச நேரமில்லாமல் பறந்து கொண்டிருக்கிறோம். அது ஏன்? பக்கத்தில் இருப்பவர்களுக்குக்கூட நேரத்தை ஒதுக்கவும் நம்மால் முடிவதில்லை.

 

இந்த நிலையிலிருந்து விலக்கி மகிழ்ச்சிகரமான சூழலில் புதையல் வேட்டை செய்ய உந்தும் வகையில் மலேசியத் தமிழ் அறவாரியம் நிதி திரட்டும் புதையல் வேட்டைக்கு ஏற்பாடு செய்தது. இந்தப் புதையல் தேடும் வேட்டை தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் ஆறாவது முறையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பெட்டாலிங் ஜெயா சிவிக் மையத்தில் தொடங்கி லூமுட் மரினா தங்கும் விடுதி வரையில் நடைபெற்ற இந்தப் புதையல் வேட்டையைத் தமிழ் அறவாரியத்தின் தலைவர் திரு இராகவன் அண்ணாமலை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். அறவாரியத்தின் செயலவை உறுப்பினர் குமாரி ச.உஷாராணி திட்ட இயக்குநராகச் செயல்பட்டார்.

இந்த வேட்டையில் 52 வாகனங்கள் பங்கு கொண்டன. இந்தியர்கள் மட்டுமல்லாது பிற இன நண்பர்களும் இப்போட்டியில் பங்குபெற்றனர். போட்டி பெட்டாலிங் ஜெயா சிவிக் மையத்தில் தொடங்கி புக்கிட் பெருந்தோங், தெலுக் இந்தான், மஞ்சோங் என 3 இடங்களில் வாகனங்களை நிறுத்தி புதையல் தேடும் வேட்டையாக அமைந்தது.

வெயிலில் வாடியபோதும் பங்கேற்பாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட போட்டியிலிருந்து சற்றும் பின் வாங்கவில்லை. 200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு குறிப்பிட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி புதையல் போட்டியில் பங்குபெற்றது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இப்போட்டி 27.5.2016 அன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான புதையல் வேட்டை மாலை 4.40 மணிக்கு மஞ்சோங்கில் முடிவுற்றது.

இப்போட்டியில் பங்குபெற்ற 52 குழுக்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 15 குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. புதையல் வேட்டையில் முதல் நிலையில் வாகை சூடிய குழு தங்கும் வசதியோடு 3 நாள் கிராபி சுற்றுப்பயணத்தை வாகை சூடினர். இரண்டாம் நிலையில் வெற்றிபெற்ற குழு பாலி செல்வதற்கான பயணச் சீட்டை வென்றனர். ஒரு குழுவில் நால்வர் இடம்பெற்றிருந்தனர்.

வெற்றி பெற்ற 15 குழுக்களுக்கான பரிசைத் தமிழ் அறவாரியத்தின் தலைவர் திரு இராகவன் அண்ணாமலை, செயலாளர் திரு செல்வஜோதி இராமலிங்கம், பொருளாளர் திரு லோகநாதன் கோவிந்தசாமி, உதவித் தலைவர் கணேசுவரன் சின்னக்காளை, துணைப் பொருளாளர் சுப்பிரமணியம் பூமாலி ஆகியோர் வழங்கிச் சிறப்பித்தனர்.