1816-இல் அதிகாரப்பூர்வமாகப் பினாங்கில் (Penang Free School) தொடங்கிய தமிழ்க்கல்விக்கு அடுத்த ஆண்டு 2016-இல் 200 வயது நிறைவடைவதை தொட்டு; தொடக்கக்கட்டமாக 14.6.2015 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.00 மணிக்கு பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்வளர்ச்சியைக் காட்டுவதற்காக இம்மரக்கன்று நடப்பட்டது.

நிகழ்ச்சி நெறியாளராக தமிழ் அறவாரியத்தின் உதவித்தலைவர் திரு. சரவணன் இராமச்சந்திரன் பணியாற்றினார்.

இந்நிகழ்வின் தொடக்கமாக நாட்டுப்பண் மற்றும் தமிழ்தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

தமிழ் அறவாரியத்தின் செயலாளர் திரு. இரா. செல்வஜோதி வரவேற்புரை ஆற்றினார்.

தமிழ் அறவாரியத்தின் தேசியத் தலைவர் திரு. அ. இராகவன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவர் தமதுரையில் தமிழ் அறவாரியம் தமிழ்ப்பள்ளிகளுக்கு இது போன்ற நிகழ்ச்சிகளை செய்து தொடர்ந்து பக்கப்பலமாக இருக்கும் என்று கூறினார்.

தொடர்ந்து இந்நிகழ்வின் இயக்குநர் திரு. சிம இளந்தமிழ் உரையாற்றினார். அதன்பிறகு பள்ளியின் தலைமையாசிரியை திருமதி. பஞ்சனியம்மாள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. முனியாண்டி @ ஜெகா வாழ்த்துரை ஆற்றினர்.

தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் திரு. பசுபதி சிதம்பரம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் அம்பிகைபாகன் திறப்புரை ஆற்றினார். அதன்பிறகு நிகழ்ச்சிக்கு அடையாளமாக திரு. இராகவன், திரு. பசுபதி மற்றும் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் அம்பிகைபாகன் நினைவேட்டில் கையொப்பமிட்டனர்.

அதன்பிறகு நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் அம்பிகைபாகன் மரக்கன்றை நட்டு மலேசியாவில் தமிழ்க்கல்வி இருநூற்றாண்டுக் கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.