தமிழ் அறவாரியம் மற்றும் ஜொகூர் பள்ளி மேலாளர் வாரியத்தின் ஏற்பாட்டில் கடந்த 11,12 ஜூலை 2015, ஜொகூர் துரோபிகல் இன் விடுதியில் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரிய உறுப்பினர்களுக்கான நிபுணத்துவ தலைமைத்துவ பயிற்சி பட்டறை இனிதே நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்தேறிய இப்பட்டறையில் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 65 வாரிய உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

முதல் நாள், ஜொகூர் பள்ளி மேலாளர் வாரியத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு விஜயகுமார் அவர்களின் வரவேற்புரையுடனும் பள்ளி மேலாளர் வாரிய செயல்திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு இளந்தமிழ் அவர்களின் தலைமையுரையுடனும் நிகழ்ச்சி தொடங்கியது.

மலேசிய பிரதமர் துறையின் கீழ் இயங்கும் தமிழ்ப் பள்ளிகளின் எதிர்கால திட்டவரைவை சேர்ந்த திரு இளஞ்செழியன் அவர்கள் நோக்கம், விழுமியங்கள் மற்றும் பள்ளி வாரியங்களுக்கான தேவையைப் பற்றி விளக்கினார். நம்மிடையே உள்ள வேற்றுமைகளைக் களைத்து, மாணவர் நலனைக் கருதி நாம் ஒன்றாக செயல்பட வேண்டும் என்றும் பள்ளியின் புற மேம்பாட்டிற்காக பள்ளி வாரியம் பாடுபட வேண்டும் எனவும் தமது படைப்பில் கூறினார். நம் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்களை மட்டுமே பேசிக் கொண்டிராமல், அதற்கான தீர்வையும் கலந்தாலோசிக்க வேண்டியது பள்ளி வாரியத்தின் கடமை என அவர் கூறினர்.

பட்டறையின் செயல்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.ம.இளந்தமிழ் அவர்கள், 200 ஆண்டுகள் மலேசியாவில் தமிழ்க்கல்வி எனும் தலைப்பினை ஒட்டி உரை நிகழ்த்தினார். 1816-ல் பினாங்கு ஃபிரி பள்ளியில் மலேசியாவின் முதல் தமிழ்க் கல்வி தொடங்கியது. 2016-ஆம் ஆண்டு, மலேசிய மண்ணில் தமிழ்க்கல்வி கண்டு 200 ஆண்டுகள் நிறைவு அடைதல் என்பது மலேசிய தமிழர் அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய வரலாறு என எடுத்துரைத்தார். மலேசியாவிற்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு கி.பி 8ஆம் நூற்றாண்டில் தொடங்கியது என வரலாற்று ஆய்வுகளோடு படைப்பினைத் தொடங்கிய அவர், தொடர்ந்து மலேசியாவில் தமிழ்க்கல்வியின் வளர்ச்சிகளையும், படிநிலையையும் விவரித்தார். அரசின் கல்வி திட்டங்களான பர்ணஸ் அறிக்கை 1949, கல்வி திட்டம் 1952, ரசாக் கல்வி கொள்கை 1959 போன்றவைகளில் தமிழ்ப்பள்ளி, தமிழ்க்கல்விகளுக்கான மாற்றங்களையும் விவரித்தார். தமிழ்ப்பள்ளிகளுக்காகவும் நமது மாணவர்களுக்காகவும்தான் நாம் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும்; தேவையில்லாதவைக்கு அல்ல எனவும், நமது இலக்கு, தமிழ்பள்ளிகளின் வளர்ச்சியையும் தரத்தையும் நோக்கியே இருக்கவேண்டுமென்றும் தமது படைப்பினை நிறைவு செய்தார்.

தமிழ் அறவாரியத்தின் உதவித் தலைவர் திரு கணேசுவரன் அவர்கள் பள்ளி வாரியத்தின் சட்டங்கள், கடமைகள் தொடர்பான விரிவான விளக்கங்களை பங்கேற்பாளர்களுக்கு விவரித்தார். கல்வி சட்டம் 1996, 1961 பிரிவு, எல்லா கல்வி நிலையங்களிலும் மேலாளர் வாரியம் இருக்க வேண்டும் என்பதை கூறுகிறது என்றார். பள்ளி வாரிய அமைப்பு, பொறுப்பாளர்களின் பதவிக் காலம், பள்ளி வாரியக் கூட்டம், போன்ற விதிமுறைகளை பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், தனது படைப்பில், பள்ளியின் இடமாற்றம், நிலசிக்கல், திடல் மறுசீரமைப்பு, புது வகுப்பறைகள் கழிவறைகள் கட்டுதல், போன்ற கடமைகளைப் பள்ளி வாரியம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தலைமைத்துவ ஆலோசகர் திரு மாசிலாமணி அவர்கள் பங்கேற்பாளர்களுக்குத் தலைமைத்துவ பயிற்சி அளித்தார். தன்முனைப்போடும், நகைச்சுவை உணர்வோடும் அவர் நடத்திய நடவடிக்கைகளில் பங்கேற்பாளர்கள் முழுமையாய் பங்கெடுத்தனர். முன்னாள் மாணவர் சங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளியின் ஆதரவாளர்கள், பள்ளியின் நலன் விரும்பிகள், தலைமையாசிரியர் இணைந்தே ஒரு பள்ளியின் வாரியம் அமைவதால், ஒருவரோடு ஒருவர் இணைந்து, ஒத்துழைத்து இருத்தலின் அவசியத்தையும், சிறந்த தலைமைத்துவ பண்புகளைப் பற்றியும் விளக்கினார்.

இரண்டாம் நாள், தமிழ்ப் பள்ளிகளின் எதிர்கால திட்டவரைவின் உதவித் தலைவர் திரு முத்துசாமி அவர்கள் நிதி நிர்வாகம், நிதி திரட்டல் தொடர்பான விளக்கங்களை அளித்தார். குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை கொண்டுள்ள பள்ளிகளில் பள்ளி மேலாளர் வாரியம் அமைத்து, பள்ளிகள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றார். அதை தொடர்ந்து, கலந்துரையாடல் அங்கத்தில் பள்ளி மேலாளர் வாரிய தொடர்பான பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு திரு இளஞ்செழியன், திரு கணேசுவரன், திரு சி.ம.இளந்தமிழ், திரு முத்துசாமி அவர்கள் பதிலளித்தனர்.

ஜொகூர் மாநில கல்வி இணை இயக்குனர் நிகழ்ச்சியின் நிறைவுரையினை ஆற்றி நிறைவு செய்தார். தனது உரையில் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியத்திற்காக அரசு உதவிகள் வழங்குவதைக் கூறினார். அரசின் உதவியோடு, பள்ளி வாரியமும் இணைந்து கைக்கோர்க்கும் போது நமது தமிழ்ப்பள்ளிகளின் நிலையை பன்மடங்கு மேம்படுத்தலாம் என்று தமது உரையில் அவர் கூறினார்.